Homeசெய்திகள்மாவட்டம்அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

-

- Advertisement -

அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகள்

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை இதோ:

பள்ளி மாணவிகள் மீது கொடூரத் தாக்குதல்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோடாலியில், தங்கள் பகுதி டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவிகள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது முதல்வர் ஜோசப் விஜய் அரசின் காவல்துறை மிகக் கொடூரமாக தடியடி நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பள்ளி மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நியாயமான கோரிக்கைக்காகப் போராடிய பெண் குழந்தைகளை இப்படித் தாக்கியிருப்பது அராஜகத்தின் உச்சம்.

விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி:

தேர்தல் களத்தில் ‘ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம்’ என முழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், தற்போதைய இந்த அராஜகச் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது வெறும் காகித விளம்பரமே என்பதை கோடாலி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

பாஜகவின் கோரிக்கைகள்:

மதுவின் பிடியில் இருந்து தங்களைக் காக்கப் போராடிய பிஞ்சுக் குழந்தைகள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தவெக அரசு உடனடியாகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு உரிய உயர்தரச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதுபோல பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

MUST READ