Homeசெய்திகள்மாவட்டம்கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற...

கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

-

- Advertisement -

கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம் உள்ளதா? கோவிலுக்கு என்று கொஞ்சமாவது நிலம் மிச்சம் இருக்கிறதா?” என்று கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூர்

மேலும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

we-r-hiring

​வழக்கின் பின்னணி
​சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

​”கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன.

​இதில், 3,390 தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டு, அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சுமார் 3,085 ஏக்கர் நிலங்களுக்கான பத்திரப்பதிவு தடையை நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் நிலங்கள் பட்டா மாறுதல் செய்யப்பட்டு தனியார் வசம் செல்லும் ஆபத்து உள்ளதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.”

​நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதம்
​இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வாதம்:
​மனுதாரர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி, “இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அரசு செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரும் இணைந்து ஒரே நாளில் இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். இது சட்டவிரோதமானது மற்றும் கோவில் நிலங்களை தனியார் வசம் கொண்டு செல்லும் முயற்சி” என்று வாதிட்டார்.

அரசு மற்றும் கோவில் தரப்பு வாதம்:
​தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் கோவில் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிடுகையில்:
​1960-களில் வழங்கப்பட்ட இனாம் நிலங்களுக்கு 1965 மற்றும் 1967-களில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டு, அவை பல கைமாறி விற்பனை செய்யப்பட்டுள்ளன.

​அங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களின் கோரிக்கையை ஏற்று, உரிய விசாரணைக்குப் பிறகே தடை நீக்கப்பட்டது.
​இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தினரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இது ஏற்கனவே செட்டில்மெண்ட் செய்யப்பட்ட இடம் என்பதால் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கோவில் தரப்பும் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்:
​வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பின்வரும் கேள்விகளை எழுப்பினர்: “பத்திரப்பதிவு தடை நீக்கம் செய்வதற்கு முன் கோவில் நிர்வாக தரப்பிடம் உரிய முறையில் ஆலோசனை நடத்தப்பட்டதா?” ​”இந்த நிலங்கள் தற்போது கோவில் வசம் இருக்கிறதா அல்லது தனிநபர் வசம் இருக்கிறதா?”
​”இவ்வளவு நிலங்களும் கைமாறிவிட்டால், கோவிலுக்கு என்று கொஞ்சமாவது நிலம் மிச்சம் இருக்கிறதா?” இதற்கிடையே, நில உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதத்தை, “அரசு தரப்பு பதில் மனு வரட்டும், அதற்குப் பின் கேட்கலாம்” எனக் கூறி நீதிபதிகள் தற்காலிகமாக நிராகரித்தனர்.

நீதிமன்ற உத்தரவு
​இறுதியாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:
​தற்போது பத்திரப்பதிவுக்கான தடை நீக்கம் செய்யப்பட்ட இடங்கள் யார் வசம் உள்ளன? ​எதன் அடிப்படையில் இந்த நிலங்களுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டது? ​என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரும், கரூர் மாவட்ட ஆட்சியரும் விரிவான அறிக்கையை வரும் 29-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விரிவான விசாரணை ஆகஸ்ட் 11-ஆம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடைபெறும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

MUST READ