“மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் கைமாறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்க விடமாட்டோம் என்று பேசும் தவெக முதலாளி விஜய் இதனை நிரூபிக்க வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று (14.07.2026) நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

“ஊரான் வீட்டு நெய்யே…”: கரூர் விவகாரத்தில் சாடல்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியான 41 நபர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிதான். ஆனால், 800 கோடி, 1000 கோடி, ஏன் 10,000 கோடி ரூபாய் வைத்துள்ள ஒரு நடிகருக்கு என்ன பிரச்சனை? சொந்தச் செலவில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் கொடுத்தால் அனைவரும் பாராட்டுவார்கள்.
அதை விடுத்து, ‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்று பழமொழியாகச் சொல்லி, அரசாங்கப் பணத்தை எடுத்துக் கொடுத்தால் இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இப்படி எல்லாம் வாழலாமா? கோடிக்கணக்கில் சொந்தப் பணம் உள்ளபோது, அரசிடமிருந்து எடுத்துத் தருவது என்ன நியாயம்?
”₹2,000 கோடி லஞ்சம் எனச் செய்தி வருகிறது!”
டாஸ்மாக் மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பாட்டில் விலையை உயர்த்தக் கோரி முதலமைச்சரிடம் கேட்டுள்ளனர். அதற்குச் சரி என்று கூறிவிட்டு, மூன்றாவது நாள் ₹2,000 கோடி லஞ்சப் பணம் சென்று சேர்ந்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதை நான் சொல்லவில்லை, செய்திகளில் வந்துள்ளது; என் மீது வழக்கு போட்டுவிடாதீர்கள். இது உண்மையாக இருந்தால், லஞ்சம் வாங்க மாட்டோம் என்று மேடைகளில் பேசுகிற தவெக முதலாளி விஜய் அவர்கள், தயவுசெய்து இந்த லஞ்சப் புகாரை நிரூபிக்க வேண்டும்.
“என் பிள்ளைகள் மீது சத்தியம்; லஞ்சம் தலைவிரித்தாடுகிறது”
தவெகவினர் லஞ்சமே வாங்குவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால், அனைத்து இடங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் திண்டுக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குத் தங்கள் பிள்ளைக்குச் சொத்து எழுதிக் கொடுக்கச் சென்றுள்ளனர். அங்கு நேரடியாகப் பணம் வாங்க மறுத்து, இழுத்தடித்துள்ளனர்.
இதையடுத்து இடைத்தரகர்கள் மூலம் ரூ.65,000 லஞ்சப் பணத்தைக் கொடுத்துத்தான் பத்திரப்பதிவை முடித்துள்ளனர். இது என் பிள்ளைகள் மீது சத்தியம், உண்மை! வெளியே யோக்கியமான ஆட்சி என்று சொல்லி முதலமைச்சர் நடிக்கிறார், இதை மக்கள் நம்ப வேண்டாம்.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்:
அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதில் கவுன்சிலர், சேர்மன், தலைவர், துணைத்தலைவர் என அனைத்துப் பதவிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். அதற்கு நீங்கள் இப்போதே தயாராக வேண்டும். பணம் கொடுக்காமல் புரட்சி செய்தோம் என்று விஜய் கூறுகிறார். அந்தப் புரட்சி உண்மையானால், நாமும் பணம் கொடுக்காமல் ஓட்டுக் கேட்டுப் பார்ப்போம், என்ன நடக்கிறது என்று தெரியும். இது ஒரு பெரிய ஏமாற்று வேலை, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் பேசினார்.
