பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட் பகுதிகளை இணைக்கும் விதமாக கங்கை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து திடீரென விழுந்தது. கடந்த 9 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், 3-வது முறையாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பால விபத்து தொடர்பாக பீகார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலத்தில், கடந்த சில மாதங்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்ததால், அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தரமற்ற கட்டுமானமே பாலங்கள் அடுத்தடுத்து இடிந்துவிழ காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.