உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12 இடத்திலும் இந்தியாவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள கௌதம் அதானியின் பெயர் இந்தியாவில் மட்டுமல்ல , உலகம் முழுவதும் கெட்டுப்போய் இருக்கிறது.
1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட அதானி குழுமம், இந்தியாவில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் உற்பத்தி, ரியல் எஸ்டேட் ஏராளமான தொழில்களை செய்து வருகிறது. மேலும் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும், பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் அதானியின் வணிகம் பரந்து விரிந்து இருக்கிறது.
2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம், கௌதம் அதானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் நிதி மோசடி செய்கிறது என்றும். அதன் மூலம் பங்கு சந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, மோசடி செய்வதாக குற்றம் சாட்டியது. அந்த அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து 120 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது. ஒரு வருடம் கழித்து உச்சநீதிமன்றம் அதானி குழுமத்திற்கு ஆதரவாக தீர்பளித்தப் பின்னர் இழப்பில் இருந்து மீண்டது.அதனை தொடர்ந்து இந்தாண்டு நவம்பர் மாதம் அதானியின் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் ,சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினால் ஆப்பிரிக்கா நாடுகள் அதானியுடன் செய்துக் கொண்ட வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக மூத்தப்பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இலங்கை துறைமுகம் மேம்பாட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும், பங்களாதேஷ், கென்யா, கன்னடா போன்ற நாடுகளும் அதானியுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதானியின் பெயர் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கெட்டுப்போய் இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டிய பிரதமர் மோடி மவுனமாக இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு!