டெல்லியின் புதிய முதலமைச்சராக அம்மாநில அமைச்சர் அதிஷி மர்லேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த 13-ஆம் தேதி பிணையில் வெளிவந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 2 நாட்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். முன்னதாக புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான அதிஷி மர்லேனா தேர்வு செய்யப்பாட்டார். 43 வயதான அதிஷியின் பெயரை முதலமைச்சர் பதவிக்கு கெஜ்ரிவால் முன்மொழீந்த நிலையில், அவர் ஒரு மனதாக தேர்வாகினார். இதனை அடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சபாநாயகர் வரும் 26, 27ஆம் தேதிகளில் சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட்டு உள்ளார்.
43 வயதான அதிஷி இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். டெல்லி அமைச்சரவையில் பல்வேறு துறைகளை கவனித்து வந்த அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி பொறுப்பேற்கிறார்.