சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அரிசி வாங்குபவர்களுக்காக ஒரு புதிய புரட்சிகரமான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் போலவே 24 மணி நேரமும் இயங்கும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ (Annapurna Grain ATM) திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தலைநகர் ராய்ப்பூரில் உள்ள பிர்கான் பகுதியில் இத்திட்டம் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல், தங்களுக்குத் தேவையான நேரத்தில் மாதாந்திர ரேஷன் அரிசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தானிய ஏடிஎம் எப்படிச் செயல்படுகிறது?
இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிது:
விவரங்களை உள்ளிடுதல்: பயனாளிகள் தங்களது ரேஷன் அட்டை விவரங்களை ஏடிஎம் திரையில் உள்ளிட வேண்டும்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பு: அதன்பின், தங்களது கைரேகையைப் பதிவு செய்து கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.
அரிசி விநியோகம்: சரிபார்ப்பு முடிந்ததும், அந்த குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட மாதாந்திர அரிசியை இயந்திரம் தானாகவே அளந்து வெளியேற்றும்.
இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் சுமார் 2,500 கிலோ அரிசியைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. அரிசியை நிரப்புவது முதல் விநியோகிப்பது வரை அனைத்துமே தானியங்கி (Automatic) முறையில் நடைபெறுகிறது.
மகளிர் சுயஉதவிக் குழுவின் பங்களிப்பு
இந்த அதிநவீன ‘கிரெயின் ஏடிஎம்’ இயந்திரத்தை உள்ளூர் பெண்கள் சுயஉதவிக் குழுவான ’ஜோதி குழு’ நிர்வகித்து இயக்கி வருகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (World Food Programme) இத்திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்கி வருகிறது.
இந்தத் திட்டம் ரேஷன் விநியோக முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், பொதுமக்களின் நேரத்தைச் மிச்சப்படுத்தி முறைகேடுகளைத் தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
