spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பாகிஸ்தான்- சீன குடிமக்களின் எதிரி சொத்துக்கள்... இந்திய அரசு கைப்பற்றத்...

ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பாகிஸ்தான்- சீன குடிமக்களின் எதிரி சொத்துக்கள்… இந்திய அரசு கைப்பற்றத் திட்டம்..!

-

- Advertisement -

சொத்துச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர இந்திய அரசு தயாராகி வருகிறது. இதனால், எதிரி சொத்துக்கள் மீது அரசாங்கத்திற்கு இன்னும் அதிக அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும். அரசாங்கம் இந்த சொத்துக்களை நேரடியாக சொந்தமாக வைத்துக்கொண்டு ‘பொது நலனுக்காக’ பயன்படுத்த முடியும். 1968 ஆம் ஆண்டின் இந்தச் சட்டத்தின்படி, எதிரி நாடுகளுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் சொத்துக்கள் ‘எதிரி சொத்துக்களின் பாதுகாவலரிடம்’ இருந்தது. அவர்களது வாரிசுகளும் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களால் விற்கவும் முடியாது. 2017 ஆம் ஆண்டில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இது ‘எதிரி குடிமகன்’,’எதிரி நாட்டு நிறுவனம்’ என்பதன் வரையறையை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தியது. ஆனால் இப்போது அரசாங்கம் இந்த சொத்துக்களின் மீது நேரடி கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்புகிறது. லக்னோ மாநகராட்சி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு இந்த மாற்றங்கள் அவசியமாகிவிட்டன.

we-r-hiring

‘பொது நலனுக்காக’ அல்லது வேறு எந்த வேலைக்காகவும் இந்த சொத்துக்களை கையகப்படுத்தலாம் என்று அரசாங்கம் கூறுகிறது. ‘பாதுகாவலர்’ இந்த சொத்துக்களை எந்த தடையும் இல்லாமல் அரசாங்கத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மாற்றங்கள் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த வாரம் அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திலும் அறிமுகப்படுத்தலாம்.

கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய அரசு ரூ.3,494.93 கோடி மதிப்புள்ள எதிரி சொத்துக்களை விற்று பணம் சம்பாதித்துள்ளது. 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடனும், 1962 ல் சீனாவுடனும் நடந்த போர்களுக்குப் பிறகு, பாகிஸ்தான், சீன குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை இந்திய அரசாங்கம் பறிமுதல் செய்தது. ‘இந்தியப் பாதுகாப்புச் சட்டம், 1962’ இன் கீழ் உருவாக்கப்பட்ட ‘இந்தியப் பாதுகாப்பு விதிகளின்’ கீழ், இந்த சொத்துக்கள் ‘பாதுகாவலரிடம்’ ஒப்படைக்கப்பட்டன. அரசாங்கத்தின் சார்பாக இந்தச் சொத்துக்களை நிர்வகிப்பதே ‘பாதுகாவலரின்’ வேலை.

ஜனவரி 2018 -ல், மக்களவையில் இந்திய அரசு பாகிஸ்தானியர்களுக்குச் சொந்தமான 9,280 எதிரி சொத்துக்களும், சீன நாட்டினருக்குச் சொந்தமான 126 சொத்துக்களும் இருப்பதாகத் தெரிவித்தது. அதே ஆண்டு, ரூ.3,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள எதிரி பங்குகளை விற்பனை செய்வதற்கான செயல்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 20,232 பங்குதாரர்களைச் சேர்ந்த 996 நிறுவனங்களின் மொத்தம் 65,075,877 பங்குகள் அடையாளம் காணப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், மத்திய அரசு அமித் ஷா தலைமையில் ஒரு ‘அமைச்சர்கள் குழுவை’ அமைத்தது. சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள 9,400க்கும் மேற்பட்ட எதிரி சொத்துக்களின் விற்பனையை மேற்பார்வையிடுவதே இதன் நோக்கம்.

MUST READ