பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதி மாற்றப்பட்டதால், இன்று நடைபெற இருந்த CUET UG 2026 தேர்வு, மே 31-ல் நடைபெறும் என NTA அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பொது விடுமுறை தேதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த CUET UG 2026 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகை (ஈத்-உல்-ஜுஹா) காரணமாக அரசு விடுமுறை தேதி மாற்றப்பட்டதே இந்த முடிவிற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, மே 28 அன்று காலை மற்றும் மாலை என இரண்டு ஷிஃப்டுகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் தற்போது மே 31 அன்று நடைபெறும் என NTA அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் கட்டாயமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அதே நேரத்தில், மே 11 முதல் மே 31 வரை ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பிற தேர்வுகள் அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம்போல் நடைபெறும் என்றும் NTA தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு CUET UG தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ள நிலையில், திடீர் ஒத்திவைப்பு காரணமாக மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி, ஹால் டிக்கெட் மற்றும் பிற அறிவிப்புகள் குறித்து மாணவர்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தகவல்களை அறிந்து கொள்ளுமாறு NTA கேட்டுக்கொண்டுள்ளது.
பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…
