Homeசெய்திகள்இந்தியாசாஹில் வக்கோடே மரண வழக்கு: சாதி பாகுபாடு, பேராசிரியர் துன்புறுத்தல் என பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சாஹில் வக்கோடே மரண வழக்கு: சாதி பாகுபாடு, பேராசிரியர் துன்புறுத்தல் என பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!

-

- Advertisement -

மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாஹில் வக்கோடே (22) விடுதியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமது மகனின் மரணத்திற்கு சாதி ரீதியான பாகுபாடும், பேராசிரியர்களின் தொடர் மன உளைச்சலுமே காரணம் என அவரது பெற்றோர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

we-r-hiring

பெற்றோரின் அதிர்ச்சித் தகவல்கள்

மும்பையில் உள்ள குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்திற்கு வருகை தந்த சாஹில் வக்கோடேயின் பெற்றோரான ரவீந்திர வக்கோடே மற்றும் சோனாலி வக்கோடே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய மாணவரின் தந்தை ரவீந்திர வக்கோடே, “ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வது எவ்வளவு கடினம் என்பதை அவனுக்கு எடுத்துச்சொல்லி, பொறுத்துக்கொள்ளும்படி நாங்கள் அறிவுறுத்தினோம். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் பேராசிரியர் சூர்யநாராயணா டோல்லா மற்றும் இயக்குனர் ஷிரீஷ் பி. கேதாரே ஆகியோர் தனது மகனைச் சாதியைக் குறிப்பிட்டுத் தொடர்ந்து அவமதித்துள்ளதாகவும், போலி வழக்குகளில் மாட்டிவிடுவதாக மிரட்டியதாகவும்” கண்ணீருடன் தெரிவித்தார்.

“பொறுத்துக்கொள்ளச் சொன்னது எங்கள் தவறு”

இதுகுறித்துத் தழுதழுத்த குரலில் பேசிய மாணவரின் தாயாரும் பள்ளி ஆசிரியையுமான சோனாலி வக்கோடே, “செப்டம்பர் 13 அன்று நாங்கள் மகனை நேரில் சந்தித்துப் பேசியபோது, தன்னை எவ்வாறு சித்ரவதை செய்கிறார்கள் என்பதைப் புலம்பித் தீர்த்தான். அப்போது அவனுக்கு மன தைரியம் மட்டுமே கூறி, ‘எதிர்காலம் நன்றாக இருக்கும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்’ என்று சொன்னோம். அதை நம்பிப் பொறுத்துக்கொள்ளச் சொன்னதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. அன்று நாங்கள் அவனை உடனே அழைத்து வந்திருந்தால் இன்று என் பிள்ளை உயிரோடு இருந்திருப்பான்” என்று கதறி அழுதார்.

மேலும், “ஒரு தாயின் வலி என்னவென்று பெற்ற தாய்க்குத்தான் தெரியும். ஐஐடி நிறுவனத்தில் தற்கொலை செய்துகொள்ளும் பல மாணவர்களும் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். என் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு மற்றும் காவல்துறையின் விசாரணை

பூபேய் காவல்துறையினர் அளித்த முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு (Crime Branch) மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியர் சூர்யநாராயணா டோல்லாவை நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆரம்பத்தில் தேர்வில் முறைகேடு செய்ததாக மாணவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு ஐஐடி நிர்வாகம் பின்னர் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பூசையின் போது மனைவி மற்றும் 2 பூசாரிகளை சுட்டுக்கொன்று, குழந்தைகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்த நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

MUST READ