உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்புபூர் கிராமத்தில் நடைபெற்ற பயங்கரச் சம்பவத்தில், தனது மனைவியையும் இரண்டு பூசாரிகளையும் சுட்டுக்கொன்றுவிட்டு, சொந்தக் குழந்தைகளையும் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நபர் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


நிகழ்ந்த்து என்ன?
காவல்துறையினர் மற்றும் முதற்கட்டத் தகவல்களின்படி, அரவிந்த் சிங் என்பவரின் வீட்டில் அவரது சகோதரரின் ஆன்மா சாந்தியடையக் கோரி சிறப்புப் பூஜை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பூஜையில் பங்கேற்க சில பூசாரிகளும் வருகை தந்திருந்தனர்.
மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த அரவிந்த் சிங், தனது எதிர்ப்பை மீறி வீட்டில் பூஜை நடத்தப்படுவதைக் கண்டு ஆத்திரமடைந்தார். இதுதொடர்பாக அங்கு நின்றவர்களுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் அரவிந்த் சிங் கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அரவிந்த் சிங்கின் மனைவி பபிதா மற்றும் பூஜை நடத்த வந்த மகேந்திர பதக், அகிலேஷ் மிஸ்ரா ஆகிய இரண்டு பூசாரிகள் சம்பவ இடத்திலேயே சுடப்பட்டு உயிரிழந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பூசாரிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
8 மணி நேரப் பிணைக்கைதி நாடகம்
கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, அரவிந்த் சிங் தனது மூன்று குழந்தைகளையும் வீட்டிற்குள் இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாகப் பிடித்து அடைத்துக்கொண்டார். இதனால் அப்பகுதியில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றமான சூழல் நிலவியது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், மாவட்ட உயர் அதிகாரிகளும் வீட்டைச் சுற்றி வளைத்து, அரவிந்த் சிங்கை சரணடையுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தினர். அவரது உறவினர்களின் உதவியோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அவர் எதையும் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்தச் சூழலில், வீட்டிற்குள் இருந்து திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. அரவிந்த் சிங் தனது 10 வயது மகனையும் சுட்டுக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மற்றும் என்கவுன்ட்டர்
குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாக அதிரடி மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ஸ்டன் கிரெனேடுகள் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினரை நோக்கி அரவிந்த் சிங் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மீண்டும் சுடத் தொடங்கினார்.
காவல்துறையினர் தற்காப்புக்காகவும், குழந்தைகளைக் காப்பாற்றும் நோக்கத்துடனும் திருப்பிச் சுட்டனர். இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அரவிந்த் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவரது 10 வயது மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த மற்ற இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அசம்கர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) அனில் குமார் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!
