மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) பகுதியில் சர்வதேச நீர்வழிப் பாதையில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது பிராந்திய அமைதியைக் குலைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக அமைதி காத்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமைதி சீர்குலையும் அபாயம்:
சர்வதேச நீர்வழிப் பாதைகள் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் சமீபத்தில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து இந்தியா மிகவும் வருத்தமடைந்துள்ளது. உலக நாடுகளின் முக்கிய வர்த்தகப் பாதையில் நிகழும் இதுபோன்ற தாக்குதல்களால் அந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நிலைத்தன்மை முற்றிலும் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தடையில்லா வர்த்தகம் அவசியம்:
இந்த விவகாரத்தில் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உடனடியாக உச்சக்கட்ட நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். வன்முறையைக் கைவிட்டு பதற்றத்தைத் தணிக்க முன்வர வேண்டும். அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பு, உலக நாடுகளுக்கான தடையில்லாத எரிசக்தி (கச்சா எண்ணெய்) விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தக உறவை எவ்வித பாதிப்புமின்றி உறுதி செய்யுமாறு இந்தியா அண்டை நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் உடனடியாகப் போர்ச் சூழலை விடுத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என இந்தியா உறுதியாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
