கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜக
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
இலவசங்களை எதிர்த்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துவரும் நிலையில், கர்நாடகாவில் இலவச வாக்குறுதிகளை பாஜக வாரி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என்று இலவச சிலிண்டர் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் பால் இலவசம், மாதந்தோறும் 5 கிலோ அரிசி, பருப்பு ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வீடு இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைகள் வருவாய்த்துறை மூலமாக வழங்கப்படும்.

பட்டியல், பழங்குடி குடும்ப பெண்கள் வங்கியில் ரூ.10,000 வைப்பு தொகை செலுத்தினால் கூடுதலாக ரூ.10,000 தரப்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். வயதானவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் 50 கிலோ வரையிலான விளை பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி, சூரிய சக்தி பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.