“மாணவர் போராட்டத்தை ஒடுக்கும் காங். அரசின் போலித்தனம் ஜனநாயகத்திற்கே ஆபத்து!”

டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் கேரளாவில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக வழக்குகளைப் பதிவு செய்யும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டிற்குப் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5,000 பேர் மீது வழக்குப் பதிவு!
டெல்லியில் போராட்டம் நடத்தும் மாணவர்களின் உரிமைகளுக்காகத் தோள் கொடுப்பது போலக் காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, அதே டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளாவில் அமைதி வழியில் பேரணி மற்றும் போராட்டங்களில் ஈடுபட்ட 5,000க்கும் மேற்பட்டோர் மீது கொடூரமான குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்துப் பேசுகையில், “உண்மையிலேயே மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாகத்தான் நிற்கிறதா?” என்று பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயகத்தின் நம்பகத்தன்மைக்கு ஆபத்து!
காங்கிரஸ் கட்சியின் இந்த அணுகுமுறையை ‘அப்பட்டமான போலித்தனம்’ எனக் குறிப்பிட்ட அவர், மேலும் கூறியதாவது, “டெல்லிக்கு ஒரு நிலைப்பாடு, கேரளாவிற்கு ஒரு நிலைப்பாடா? ஒரே விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்துவரும் இதுபோன்ற இரட்டை நிலைப்பாடு என்பது ஜனநாயக அரசியலின் அடிப்படை நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சிதைத்துவிடும்.” டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, தங்கள் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் அதே போராட்டக்காரர்களை ஒடுக்குவது காங்கிரஸின் போலித்தனமான அரசியலையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது எனத் தெரிவித்த அவர், மாணவர் உரிமைகளை நசுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாகக் காங்கிரஸ் அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நீட் போராட்டம்: வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு அதிரடி உத்தரவு!
