ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ள பாட்லி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிமருந்துப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 5) காலை சுமார் 9.40 மணியளவில் கிடங்கில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்குக் கேட்டதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
விபத்து ஏற்பட்டபோது கிடங்கிற்குள் தொழிலாளர்கள் இருந்துள்ளனர். வெடிவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் முகமது ஆமிர் சொராகர் (28), அவரது உறவினரான முஜீத் சொராகர் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் தீவிரம்
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நாகௌர் கோட்வாலி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த சில வீடுகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை தொடக்கம்
இந்தக் கிடங்கிற்கு பட்டாசு சேமிப்பதற்கான நிரந்தர உரிமம் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெடிமருந்துகள் சேமிக்கப்பட்டிருந்தனவா அல்லது உரிமத்தில் குறிப்பிடப்படாத தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிவிபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
