நாடு முழுவதும் 16 லட்சம் சைபர் குற்ற புகார்கள் வந்துள்ளது. அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் அதனை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள சைபர் காவல் நிலையங்கள் தொடர்பாகவும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா,
“cybercrime.gov.in” என்ற இணையதளம் மூலம் சைபர் குற்றங்களை புகார் அளிக்க எளிதான வழிமுறை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களின் அடிப்படையில் அந்தந்த மாநில காவல் துறையினருக்கு புகார்கள் அனுப்பப்படும் என்றும், அதன் அடிப்படையில் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் 2022 டிசம்பர் 7ம் தேதி வரை இணையதளத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார்களின் அடைபடையில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் சைபர் குற்றங்களை விசாரிக்கவும், கண்காணிக்கவும் 202 சைபர் காவல் நிலையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருவதாகவும் இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 46 சைபர் காவல் நிலையங்களும், மகாராஷ்டிர மாநிலத்தில் 43 சைபர் காவல் நிலையங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.