கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரையும், பின்னர் சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்த இளம்பெண் ஸ்ருதி, தற்போது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். அவருக்கும் சந்தீப் என்பவருக்கும் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இன்று (நவம்பர் 7) திருமணம் நடைபெற்றது.


9 குடும்ப உறுப்பினர்களைப் பறித்த நிலச்சரிவு
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பேரிடரில் ஸ்ருதியின் பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் ஸ்ருதியின் வீடும் நிலச்சரிவில் முற்றிலும் அழிந்தது.
இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர முடியாமல் ஸ்ருதி தவித்து வந்த நிலையில், அவருக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தவர் ஜென்சன். இருவருக்கும் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
வருங்கால கணவரையும் பறித்த சாலை விபத்து
குடும்பத்தினரை இழந்த துயரத்தில் இருந்த ஸ்ருதிக்கு மேலும் ஒரு பேரிடியாக, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் அவரது வருங்கால கணவர் ஜென்சன் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஸ்ருதியும் பலத்த காயமடைந்தார்.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இழப்புகளால் ஸ்ருதியின் வாழ்க்கை பெரும் சோகத்தில் மூழ்கியது. குடும்பத்தையும், வாழ்க்கைத் துணையாக வரவிருந்தவரையும் இழந்த அவர், பல்வேறு சவால்களைக் கடந்து வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றார்.
அரசுப் பணி வழங்கிய கேரள அரசு
ஸ்ருதியின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கேரள அரசு அவருக்கு வருவாய்த்துறையில் எழுத்தர் பணி வழங்கியது. இதையடுத்து அவர் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.
அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் மானந்தவாடியைச் சேர்ந்த சந்தீப், ஸ்ருதியின் கடந்த கால வாழ்க்கை மற்றும் அவர் சந்தித்த துயரங்களை முழுமையாக அறிந்துகொண்டு அவரைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
குருவாயூர் கோவிலில் திருமணம்
இதனைத் தொடர்ந்து, இன்று காலை குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஸ்ருதி – சந்தீப் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
வயநாடு நிலச்சரிவுக்குப் பிந்தைய மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே. ராஜனும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
“புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் மகிழ்ச்சி”
திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி, தனது வாழ்க்கையில் நடந்த அனைத்துத் துயரங்களையும் அறிந்த பிறகும் தன்னை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைத் துணையாக வந்த சந்தீப்புடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
தனது கடினமான காலங்களில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பேரிழப்புகளையும் சோதனைகளையும் கடந்து, ஸ்ருதி புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ள சம்பவம் கேரள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
