வங்கக்கடலில் உருவான முரசு புயலால் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விவசாயம், சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்திற்கு ரூ.1,919 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே அர்னாப் புயலின் பாதிப்பிலிருந்து ஆந்திர மாநிலம் மீண்டு வருவதற்குள், அடுத்தடுத்து முரசு புயலும் தாக்கியதால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசிடம் நிவாரணம் கோரிய சந்திரபாபு நாயுடு!
அமராவதியில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.
மேலும், முரசு புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சமாளிக்க உடனடியாக இடைக்கால நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
முதற்கட்ட மதிப்பீட்டின்படி, புயலால் சுமார் ரூ.1,919.59 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
1.8 லட்சம் விவசாயிகள் பாதிப்பு!
முரசு புயலால் சுமார் 1.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் 1.86 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத் துறையில் மட்டும் சுமார் ரூ.875 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 6,504 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் உயிரிழப்பு; வீடுகள், படகுகள் சேதம்!
புயல் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 983 வீடுகள், 346 மீன்பிடிப் படகுகள் மற்றும் 220 மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன.
மின்சாரக் கட்டமைப்புகள், சாலைகள், குடிநீர் விநியோகம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைக்கவும், சேதமடைந்த சாலைகளைப் புதுப்பிக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து இரண்டு புயல்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரப் பிரதேசத்திற்கு மத்திய அரசு விரைவில் நிதியுதவி வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
