ஒருவரை போலீசார் முதலில் காவலில் எடுக்கும் நேரத்திலிருந்தே, அவரை நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேரக் கெடு கணக்கிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவலில் வைத்த பிறகு முறைப்படி கைது செய்ததாகப் பதிவு செய்யும் நேரத்திலிருந்து கணக்கிடுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2)-வது பிரிவின்படி, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் ஒருவர், அருகிலுள்ள மாஜிஸ்திரேட் முன்பு 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்தப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்வதற்குத் தேவையான பயண நேரம் மட்டும் இந்தக் கணக்கில் விலக்கப்படும்.
இந்த விதியை விளக்கிய நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் அடங்கிய அமர்வு, ‘கைது’ மற்றும் ‘காவலில் வைத்தல்’ ஆகியவற்றுக்கு இடையே செயற்கையான வேறுபாட்டை உருவாக்க முடியாது என்று கூறியுள்ளது. விசாரணை, தேடுதல் அல்லது சோதனை நடவடிக்கைகளுக்காக ஒருவரை காவலில் வைத்திருக்கும் நேரத்தையும் 24 மணி நேரக் கணக்கில் சேர்க்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
எந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு?
திரிபுராவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், 11.03 கிலோ யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர், 2025 செப்டம்பர் 29-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையின்போது காவலில் வைக்கப்பட்டனர்.
ஆனால், மறுநாள் செப்டம்பர் 30-ம் தேதி காலை 11 மணிக்குத்தான் அவர்கள் முறைப்படி கைது செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டது. இதனால், காவலில் வைக்கப்பட்ட நேரத்திலிருந்து சுமார் 18 மணி நேரம் நீதித்துறை கண்காணிப்பின்றி அவர்கள் இருந்ததாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
காவலில் வைக்கப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை மீறப்பட்டதால் நான்கு பேரையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
மாஜிஸ்திரேட்டுகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்
ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, அவரது சுதந்திரம் எந்த தேதி, எந்த நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை மாஜிஸ்திரேட்டுகள் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 24 மணி நேரக் காலக்கெடு முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை மாஜிஸ்திரேட்டுகள் சுயமாக ஆய்வு செய்ய வேண்டும். காவலில் வைக்கப்பட்ட காலம் நியாயமானதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். காவல் காலம் அளவுக்கு அதிகமாக இருந்தால், நீதிமன்றக் காவலுக்கு அனுமதி வழங்க மறுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
24 மணி நேரத்தைக் கணக்கிடும்போது, கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் செல்வதற்குத் தேவையான பயண நேரத்தைத் தவிர வேறு எந்தக் காலத்தையும் விலக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு, விசாரணை என்ற பெயரில் ஒருவரை முறைப்படி கைது செய்யாமல் நீண்ட நேரம் காவலில் வைத்திருப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய உத்தரவாகப் பார்க்கப்படுகிறது.
அக்டோபரில் 145.07 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சாதனை! இந்திய ரயில்வே புதிய மைல்கல்
