தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 10-வது தீப உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக ராமாயணக் காட்சிகளைத் தத்ரூபமாக விளக்கும் அலங்கார ஊர்திகளுடன் பிரமாண்ட சோபா யாத்திரை நடைபெற்றது.


14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் அயோத்திக்குத் திரும்பியதை வரவேற்கும் விதமாக இந்த தீப உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
18 அலங்கார ஊர்திகளுடன் பிரமாண்ட ஊர்வலம்
இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான சோபா யாத்திரை இன்று காலை அயோத்தியில் உள்ள சாகேத் மகா வித்யாலயாவில் இருந்து தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் செல்லும் இந்த ஊர்வலம் ராம் கதா பூங்காவைச் சென்றடைகிறது.
ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகளை விளக்கும் வகையில் 18 அலங்கார ஊர்திகள் இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீராமரின் பிறப்பு, விஸ்வாமித்திரருடன் யாகம் காத்தல், சீதா கல்யாணம், வனவாசம், இலங்கை தகனம், ராவண வதம் உள்ளிட்ட காட்சிகள் தத்ரூபமான சிலைகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு
இந்த சோபா யாத்திரையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களது மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மேலும், கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ராமலீலா கலைஞர்களும் ராமாயணக் கதாபாத்திரங்களின் வேடமணிந்து ஊர்வலத்தில் அணிவகுத்துச் சென்றனர்.
அயோத்தி வீதிகளில் நடைபெற்ற இந்தப் பிரமாண்ட யாத்திரையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, மலர்களைத் தூவி ஊர்வலத்தை வரவேற்றனர்.
30 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற ஏற்பாடு
தீப உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு சரயு நதிக்கரை மற்றும் ராம் கி பைடி பகுதிகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகத்திலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிரச் செய்யப்படுகின்றன.
2,100 டிரோன்கள் மூலம் கண்கவர் ஒளிக்காட்சி
விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக 2,100 டிரோன்கள் மூலம் ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகளையும், ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பிய காட்சியையும் விளக்கும் பிரமாண்ட வான்வெளி ஒளிக்காட்சி நடைபெறுகிறது. இதனுடன் 3டி லேசர் காட்சிகளும் இடம்பெறுகின்றன.
மாலை 5.45 மணியளவில் 1,100-க்கும் மேற்பட்ட சாமியார்கள் மற்றும் பூசாரிகள் பங்கேற்கும் சரயு நதி மகா ஆரத்தி நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு ராம் கி பைடி பகுதிக்குச் செல்ல சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழாவின் முக்கிய நிகழ்வுகளைக் காண நகரின் பல்வேறு இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியம், ஆன்மிகம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப ஒளிக்காட்சிகள் என அயோத்தி நகரமே தீபாவளி கொண்டாட்டத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
