Homeசெய்திகள்சட்டம்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடிய கனிமொழி என்.வி.என்.சோமு!

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடிய கனிமொழி என்.வி.என்.சோமு!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி கனிமொழி என்.வி.என்.சோமு உயர்நீதிமன்றத்தில் மனு!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடிய கனிமொழி என்.வி.என்.சோமு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கை விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. மேலும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி இந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களைப் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், கனிமொழி என்.வி.என்.சோமு தாக்கல் செய்துள்ள மனுவில், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் பொதுவெளியில் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், விசாரணை தொடங்குவதற்கு முன்பே இத்தகைய சம்பவம் நடைபெறவில்லை எனக் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துகளையும் விமர்சித்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர், சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏ அப்பாவி எனக் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமான விசாரணை தேவை – மனுவில் வலியுறுத்தல்

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பது, வழக்கு விசாரணை முறையாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சில சூழல்களில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் முழுவதும் மின்னணு தகவல் தொடர்பு வாயிலாக நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், வழக்கில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் உரிய பிரிவுகள் சேர்க்கப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், வழக்கைச் சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு ஆதாரங்களைப் பாதுகாக்கக் கோரிக்கை

முதலமைச்சர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், வருகைப் பதிவேடுகள், சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏவின் வாட்ஸ்அப் உரையாடல்கள், செல்போன் விவரங்கள் மற்றும் தொலைபேசி கோபுர இருப்பிடத் தகவல்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை கடந்த ஜூலை 31-ஆம் தேதி முதல் பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாகவும் கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சுதந்திரமான விசாரணை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பெண் அதிரடிப்படை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும், மாநில அரசு சம்பந்தப்பட்ட எம்எல்ஏவைப் பாதுகாப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கனிமொழி என்.வி.என்.சோமு தனது மனுவில் கோரியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி தொடர்பாக நீதிமன்ற உத்தரவு – பாதுகாக்கப்பட்ட தகவல்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை!

MUST READ