ஏலக்காய் பற்றி எல்லாருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களை இருக்க முடியாது. நாம் தினமும் குடிக்கும் காபி, டீ போன்றவற்றில் இந்த ஏலக்காயை பொடி செய்து சிறிதளவு கலந்தால் கூட அந்த டீ ,காபியானது மனமாகவும் சுவையாகவும் இருக்கும். தற்போது இந்த ஏலக்காய் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Elettaria Cardamomum என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஏலக்காய்களின் உள்ளிருக்கும் விதைகள் மருத்துவ பயன்கள் கொண்டவை. இதனை எலரிசி என்று அழைப்பர்.
ஏலக்காயின் மருத்துவ பயன்கள்:
1.சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன் ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை லேசாக வறுத்து பொடியாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறை சரி செய்யலாம்.
2. வயிற்று வலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இரண்டு கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்று வலி குணமடையும்.
3. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அஜீரணம், வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும். அந்த சமயத்தில் ஏலக்காயின் மேல் தோலை உரித்து உள்ளிருக்கும் ஏலரிசியை எடுத்துக் காயவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இரண்டு கிராம் அளவு பொடியை தேவையான அளவு எலுமிச்சம் பழச்சாற்றை குலைத்து உணவு உட்கொண்ட பின் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ச்சியாக ஓரிரு
நாட்கள் இவ்வாறு உட்கொண்டால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், வாந்தி, குமட்டல் போன்றவற்றை சரி செய்யலாம். அஜீரணம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே இதை செய்து பார்க்க வேண்டும்.
இந்த நாட்டு மருத்துவத்தை என் பாட்டி என்னிடம் சொன்னார். இதனை நீங்கள் ஒருமுறை செய்து பார்த்து விட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.