ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க ‘PAPERBANANA’ என்ற புதிய AI தளத்தை அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்.


ஆராய்ச்சி உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அந்த வரிசையில், வரைபடங்கள் மற்றும் கல்வி விளக்கப்படங்களை உயர் தரத்தில் உருவாக்கும் ‘Paper Banana’ என்ற புதிய AI தளத்தை Google நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆராய்ச்சி கட்டுரைகளுக்க தேவையான தொழில்முறை தரமான வரைபடங்களை எளிதாக்கவும், துல்லியமாக்கவும் உருவாக்குவதை நெறிப்படுத்துவதே ”பேப்பர் பனானாவின்” நோக்கமாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆய்வுக் கட்டுரைகள், ஜர்னல் வெளியீடுகள் மற்றும் கல்வி விளக்கப்படங்களுக்கான காட்சிப்படுத்தல்களை சில நிமிடங்களிலேயே உருவாக்கும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தின் மூலம் உருவாக்கப்படும் ‘Research Diagram’-கள் தெளிவான வடிவமைப்பு, அமைப்பு மற்றும் தொழில்முறை தரத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், வரைபடங்களை உருவாக்கிய பின் அவற்றில் தேவையான சிறிய திருத்தங்கள், வடிவ மாற்றங்கள் மற்றும் எழுத்து திருத்தங்கள் போன்றவற்றையும் பயனர்கள் தங்களே மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வெளியீட்டிற்கு முன் இறுதித் தயாரிப்பை எளிதாகச் செய்துகொள்ள முடியும்.
மற்ற AI கருவிகளுடன் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ‘Paper Banana’ சிறப்பான செயல்திறன் மற்றும் துல்லியத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் ஆய்வு பணிகளில் நேரத்தை மிச்சப்படுத்தி, தரமான காட்சிப்படுத்தல்களை உருவாக்க முடியும்.
ஆராய்ச்சி துறையில் AI கொண்டு வரும் புதிய புரட்சியாக ‘Paper Banana’ பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிவியல் மற்றும் கல்வி துறையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


