கொலை வழக்கு, சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொலை வழக்கு திடீரென செய்தியாகி வருவது ஏன்?
நார்த் யார்க்ஷயரில் வசித்து வந்த 25 வயதான ராணியா அலேட். கணவன், மூன்று குழந்தைகளுடன் நிறைவான குடும்பம். ஆனால், அவரது வாழ்க்கையில் ஒரு புயல் வந்தது. அவரது கணவர் அஹ்மத் அல்-காதிப் மனைவி ராணியா மாடர்ன் உடை, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவது தொடர்பாக அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்தார்.
கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமானதால் ரணியா தனது கணவரைப் பிரிந்து செல்ல வழக்கறிஞர்களின் உதவியை நாடினார். வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ ஆரம்பித்தாள். இருப்பினும், இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. வீட்டை விட்டு பிரிந்த பிறகு, ராணியா ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து புதிய நண்பர்களை உருவாக்கினார். சிறிது நாட்கள் கழித்து, இணையத்தில் ஒரு இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தொடர்பு நட்பானது.
இதனை அறிந்த அவரது கணவர் அகமது வேறு சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். ஜூன் 2013 -ல், அவர் தனது மனைவியை சந்திப்பதாகக் கூறி தனது சகோதரரின் குடியிருப்புக்கு அழைத்து வந்து கொலை செய்தார். கொலைக்குப் பிறகு, அகமது மற்றொரு ஆபத்தான சதித்திட்டத்தை தீட்டினார். ராணியாவின் உடலை சூட்கேசில் அடைத்து வீட்டுக்குள் மறைத்து வைத்தார்.
அகமது, ராணியாவின் ஜீன்ஸ், டாப் மற்றும் சால்வை அணிந்து வேண்டுமென்றே சிசிடிவி கேமராக்களுக்கு முன்னால் அவள் உயிருடன் இருப்பது போல் தானே நாடகமாடிக் காட்டிக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் தனது சகோதரருடன் சேர்ந்து மோட்டார் வாகனத்தில் ராணியாவின் உடலைக் கொண்டு சென்றார். இந்தச் சதியில் தனது மூன்றாவது சகோதரனையும் இணைத்துவிட்டு, வீட்டிலிருந்து 87 மைல் தூரம் சென்று, உடலை வெறிச்சோடிய இடத்தில் சாலையோரம் புதைத்துவிட்டார்.
ராணியா தொலைபேசி அழைப்புகளை எடுப்பதை நிறுத்தியபோது, அவரது நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அகமதுவோ, ராணியா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் காட்ட முயன்றார். இருப்பினும் நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அகமதுவை 2013 ஜூலையில் கைது செய்தனர். தீவிர விசாரணையில், அவர் தனது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அகமது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், கொலைக்குப் பிறகு ராணியாவை எங்கு புதைத்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், போலீஸ் விசாரணையில், அகமது ராணியாவை மாடர்ன் ஆடைகள் உடுத்தியதால் கொன்றதாக பொய்யான வாக்குமூலத்தை அளித்து இருந்தார்.
ஆனால், போலீஸ் விசாரணையில் இது கவுரவக் கொலை என தெரியவந்தது. அவரது சகோதரர்களில் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளும் மற்ற சகோதரருக்கு நான்கு ஆண்டுகளும் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் வடக்கு யார்க்ஷயரில் உள்ள திர்ஸ்கில் உள்ள A19 சாலையில் தோண்டத் தொடங்கியுள்ளனர். உண்மையில், ராணியாவின் உடலை அகமதுதான் இங்கு புதைத்ததாக போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், ராணியாவின் சடலம் இன்னும் போலீஸாருக்கு மர்மமாகவே உள்ளது.