அதிமுகவில் தனக்கு எதிராக யாரும் இல்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு முடிவின்படி ஓ பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் நீக்கப்பட்டது இறுதி முடிவு எனவும், பிரிந்தவர்கள் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் நடைப்பெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி ஓர் ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ளதால், மத்திய பாஜக அரசை எதிர்க்க திமுக பயப்படுவதாக கூறினார். காங்கிரஸ் தலைவர்களை வைத்து கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடாமல், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலம் நாணயம் வெளியிட்டதில் திமுகவின் இரட்டை வேடம் மக்களுக்கு புரிந்துவிட்டதாக கூறினார்.
வலுவான கூட்டணி இல்லாமலே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கணிசமான வாக்குகள் பெற்றதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி வலுவாக உள்ளதால் தான் திமுக வெற்றி பெற்றது. தற்போது திமுக கூட்டணிக்குள் புகைய ஆரம்பித்துவிட்டது, விரைவில் நெருப்பு பிடித்துவிடும் என கூறினார். கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என கூறினார். மேலும் 2026 தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணியை அமைத்து மக்கள் ஆதரவோடு ஆட்சியை பிடிக்கும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் தனக்கு எதிராக 6 பேர் உள்ளதாக தொடர்ந்து திட்டமிட்டு பொய்யான செய்திகள் எழுதுகிறார்கள். அதிமுகவில் தனக்கு எதிராக யாரும் இல்லை எனவும், இது ஒரு கட்டுக்கோப்பான கட்சி என பேசினார். மேலும் அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைய உள்ளார்கள் என செய்திகள் எழுதப்படுவது குறித்து பேசிய அவர், அதிமுக பொதுக்குழு கூடிய எடுத்த முடிவின்படி ஓ பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் நீக்கப்பட்டார்கள். நீக்கபட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். பொதுக்குழு எடுத்த முடிவு தான் இறுதியானது என தெரிவித்தார்.