‘‘லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் கிண்டலடித்துள்ளார்.
தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் சபதம் எடுத்துள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து நாளை முதல் பா.ஜ.க-வினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள். அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு. இதற்காக நாளை காலை கோவையில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளேன்.

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதில் இருந்து செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து தி.மு.க விற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம்’’ எனத் தெரிவித்தது விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் ‘‘அண்ணாமலை ஏன் இப்படி ஆனார்?” அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார்; அதிமுக எதிர்க்கட்சி இல்லை, பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார். லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை” எனக் கிண்டலடித்துள்ளார்.


