லண்டன் டூ மும்பை பயணம் எளிதாக நடவடிக்கை — ஏற்கனவே ரூ.34 கோடியில் சொத்து வைத்திருக்கும் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து மும்பையில் ரூ.18.29 கோடி மதிப்பில் புதிய சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளனர்.

வெர்சோவாவில் புதிய குடியிருப்பு
மும்பையின் முக்கிய மற்றும் ஆடம்பரப் பகுதியான வெர்சோவாவில் (Versova) இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. தற்போது விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் லண்டனில் குடியேறி வசதித்து வருகின்றனர். இருப்பினும், கிரிக்கெட் போட்டிகள், விளம்பரப் படப்பிடிப்புகள் மற்றும் தனிப்பட்ட பணிகளுக்காகக் கோலி அடிக்கடி இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், மும்பைக்கு வரும் நேரங்களில் தங்குவதற்கும் வசதிக்காகவும் இந்த புதிய வீட்டை அவர்கள் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வோர்லியில் ரூ.34 கோடி வீடு
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பையின் வோர்லி (Worli) பகுதியில் ரூ.34 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகள் கொண்ட ஆடம்பர வீடு ஒன்றை விராட் கோலி வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் மும்பையின் முக்கியப் பகுதியில் ரூ.18.29 கோடி செலவில் புதிய வீட்டை வாங்கியிருப்பது, ரியல் எஸ்டேட் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
