
கோவையில் கல்லூரி மாணவி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது தந்தையைக் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்கப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி. இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் கும்பல், திடீரென மாணவியின் வீட்டிற்குல் அத்துமீறி நுழைந்து மறைத்து வைத்திருந்த கட்டை மற்றும் ஆயுதங்களால் மாணவியின் தந்தை சிவக்குமாரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். வீட்டின் கதவு , ஜன்னல்கள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
தப்பியோடிய கும்பல்:
அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வருவதைக் கண்ட அந்த கும்பல், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இரத்த வெள்ளத்தில் காயமடைந்த சிவக்குமாரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அத்துடன் சம்பவம் குறித்துப் காவல்துறையில் பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது தந்தையும் புகார் அளித்துள்ளனர். அதில் தங்களை தாக்கியதுடன் வீட்டிலிருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நகைகளையும் திருடிச்சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் மாணவியுன் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மகளுக்கு தொல்லை ; கண்டித்த தந்தை :
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் மாணவியின் அடையாள அட்டையை வலுக்கட்டாயமாக பறித்து வம்பிழுப்பது போன்று தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த மாணவியின் தந்தை சிவக்குமார், சூர்யாவை நேரில் சந்தித்து கண்டித்துள்ளார்.
இந்தக் கண்டிப்பால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தனது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு இந்தத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம் என்றும், தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்பட்டுள்ளது; விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
