அதிமுகவில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறி வரும் சூழ்நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் பெரும் சுணக்கத்துடனும், மூத்த நிர்வாகிகளின் புறக்கணிப்புடனும் நடந்து முடிந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

களையிழந்த கட்சி அலுவலகம் – தலைவர்கள் புறக்கணிப்பு
வழக்கமாக அதிமுகவின் மகளிர் அணி கூட்டங்கள் என்றாலே கட்சி அலுவலக வாசலில் 500-க்கும் மேற்பட்ட பெண் தொண்டர்கள் திரண்டு எடப்பாடி பழனிசாமியை உற்சாகமாக வரவேற்பது வழக்கம். ஆனால், இன்று மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி உட்பட வெறும் 4 நிர்வாகிகள் மட்டுமே இபிஎஸ்-ஐ பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஒட்டுமொத்தமாக 130-க்கும் குறைவான பெண் நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தொண்டர்கள் எவரும் வராததால் கட்சி அலுவலகமே களையிழந்து காணப்பட்டது.
அதேபோல, கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டங்களில் பங்கேற்கும் துணைப் பொதுச்செயலாளர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்து வராமல் இருந்தது, எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு என்ன அருகதை இருக்கிறது? – இபிஎஸ் காட்டம்:
ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்தச் சட்டமன்றத் தேர்தலில் நமது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. துரோகிகள் சிலர் கட்சியை விட்டு வெளியேறுவதால் உண்மையான தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருக்கிறார்கள். அதிமுக என்பது அரை நூற்றாண்டு கண்ட ஒரு ஜனநாயக இயக்கம். இதனை யாராலும் அழித்துவிட முடியாது.
மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழக வெற்றிக் கழகம் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்துள்ளது. மக்கள் இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து தான் அதிமுகவினரை எம்.எல்.ஏ-க்களாக ஆக்கினார்கள். ஆனால், அப்படி வென்றவர்களைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, தவெக-வுடன் இணைந்து விஜய் ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஆட்சியை நடத்த முதல்வர் விஜய்க்கு என்ன அருகதை உள்ளது? அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மகளிர் அணியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.”

“அகராதியில் துரோகியை விட வேறு வார்த்தை இல்லை” – கே.பி.முனுசாமி காட்டம்!
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியிடம், முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை தவெக-வில் இணையுள்ளது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர்
“அதிமுகவில் இருந்தபோது எல்லாப் பதவிச் சுகங்களையும், வசதிகளையும் அனுபவித்துவிட்டு, கட்சி தோல்வியைச் சந்தித்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில் தாங்கிப் பிடிக்காமல், மாற்றுத் தளத்திற்கு ஓடுகிறார்கள். பல வழக்குகளைச் சந்தித்த இந்தத் துரோகிகள் எங்கே சென்றால் எங்களுக்கு என்ன? ஒவ்வொரு சாதாரணத் தொண்டனும் ரத்தம் சிந்தி இந்த இயக்கத்தைக் காப்பாற்றியுள்ளான். ஆனால், இவர்கள் சுயநலத்திற்காகக் துரோகம் செய்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்களைத் ‘துரோகிகள்’ என்கிறோம். தமிழ் அகராதியில் ‘துரோகி’ என்ற வார்த்தையை விடக் கடுமையான வார்த்தை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் இவர்களை அப்படி அழைக்கிறோம்” என்று மிகவும் கொந்தளிப்பாகப் பதிலளித்தார். முன்னாள் அமைச்சர்களின் கட்சித் தாவல் மற்றும் மூத்த தலைவர்களின் அதிருப்தி ஆகியவை அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஆட்சியை கவிழ்க்க சதி..!! ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரருக்கு தொடர்பு??
