பெற்றோர் கண்டித்ததால் 12 வயது சிறுமி தற்கொலை
பல்லடம் அருகே பொங்கலூரில் பெற்றோர் கண்டித்ததால் 12 வயது சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலி தொழிலாளியான இவருக்கு பேபி என்ற மனைவியும், 12 வயதில் வைஷ்ணவி என மகளும், 10 வயதில் அபினேஷ் என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி மசநல்லாபாளையம் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருந்த சிறுமி வைஷ்ணவி குறும்பு செய்ததாகவும், இதனால் தாய் பேபி கண்டித்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் சிறுமி வைஷ்ணவி மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள விவசாய கிணற்றின் மேற்பரப்பில் சிறுமியின் காலணிகள் இருந்ததை அறிந்து சந்தேகமடைந்த பெற்றோர் அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து திருப்பூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், 60 அடி ஆழம் 30 அடி அகலம் உள்ள தண்ணீர் நிரம்பிய கிணற்றில் உள்ளே இறங்கி தேடினர். அதில் உயிரற்ற நிலையில் சிறுமி வைஷ்ணவியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார், சிறுமி உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கலூர் அருகே விவசாய கிணற்றில் 12 வயது சிறுமியின் உடலை உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.