இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த 5 ஆம் தேதி கச்சத்தீவு அருகே, கடலில் இரண்டு படகுகளில், மீன்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சுத்தி வளைத்து பிடித்து, கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டி, இலங்கை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதை அடுத்து மீன்வர்களின் குடும்பத்தினர், மீனவர்களை விடுவிக்க கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் க்கு கடிதம் எழுதி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.


இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 15 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. அதை அடுத்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இவர்கள் யாருக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாததால், 15 மீனவர்களுக்கும் இந்திய தூதரகம் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கியது. பின்னர் மருத்துவ பரிசோதனை போன்றவை நடத்தி முடித்துவிட்டு, இன்று அதிகாலை இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, சென்னைக்கு புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 15 பேரையும் அனுப்பி சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு மினி பஸ் மூலம் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாஜக சார்பில் சசிகலா புஷ்பா தலைமையில் வரவேற்பு

சென்னை விமான நிலையத்தில் வெளியே வந்த மீனவர்களை, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா தலைமையில், பாஜகவினர் கொடிகளுடன் வந்து வரவேற்றனர். மீனவர்கள் இலங்கையில் இருந்து வரும் தகவலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு தெரிவித்து, விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டும் என்று கூறினார். எனவே நாங்கள் வந்து வரவேற்கிறோம். பிரதமர் மோடியின் பெரும் முயற்சியால் இந்த மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி இருக்கையில் இந்திய மீனவர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை என்று சசிகலா புஷ்பா கூறினார்.

