அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில் இணைத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முன்பு ஊழல் சக்தி என்று விமர்சித்த அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு மச்சம் வைத்து தூய சக்தியாக மாற்றிவிட்டீர்கள்” என கடுமையாக சாடினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில அரசின் முன் ஏராளமான மக்கள் பிரச்னைகள் குவிந்துள்ள நிலையில், அவற்றில் கவனம் செலுத்தாமல் பிற கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை இழுக்கும் அரசியலிலேயே முழு கவனமும் செலுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். “ஆள் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு, ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்துங்கள்” என்று வலியுறுத்திய அவர், தேர்தலுக்கு முன்பு அதிமுகவை “ஊழல் சக்தி” என விமர்சித்தவர்கள், தற்போது அதிமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏ-க்களை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருப்பதை சாடினார்.

“ஊழல் சக்தி என்று கூறிய அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு மச்சம் வைத்து தூய சக்தியாக மாற்றிவிட்டீர்கள் போலும்” என்று கிண்டலாக பேசிய அவர், இதைத்தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்மையில் “தீர்ந்துபோன சக்திகளிடம் திருடும் காய்ந்துபோன சக்தி” என விமர்சித்ததாகவும் நினைவூட்டினார். பயிர்கடன் தள்ளுபடி விவகாரத்தை எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் “மறுஜென்மத்தில் விவசாயியாக பிறக்க ஆசைப்படுகிறேன்” என்று கூறியதை சுட்டிக்காட்டி, “விவசாயியாக பிறக்க இன்னொரு ஜென்மம் தேவையில்லை; எப்போது வேண்டுமானாலும் விவசாயியாக மாறலாம்” என பதிலடி கொடுத்தார்.
மேலும், அரசு பள்ளிகளுக்குள் தவெக நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து நிகழ்ச்சிகள் நடத்துவதையும், மாணவர்கள் மத்தியில் சினிமா குத்துப்பாடல்கள் மற்றும் இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள் ஒலிபரப்பப்படுவதையும் ஏற்க முடியாது என்றும் அவர் பேரவையில் கடுமையாக விமர்சித்தார்.
கோவில் நிதியில் கார் பார்க்கிங் ஏன்? – சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி?
