திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளுடன் அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் கடந்தாண்டு மார்ச் 30ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பாக உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மா நகரா ட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிய நடை முறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த 4 புதிய மா நகராட்சிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாநக மன்ற தலைவர்களிடம் வழங்கினார். இதன்மூலம் தமிழகத்தில் மா நகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.