விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காவல்துறையினரின் லத்தியை பறித்து தாக்கிய 6 பேர் கும்பலை போலிசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய தலைமை காவலர்கள் சக்கி, ராம்குமார் ஆகியோர், வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கும்பல் போலீசாரை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோரிடம் இருந்த லத்தி கம்புகளை பறித்து, அவர்களையே சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில் தாக்குதலில் ஈடுபட்ட கீழ பால்பாண்டி (31), கிளிராஜன் (24), பாஞ்சாலி ராஜா (40) பாண்டியராஜ்(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்து வந்த சரவணகார்த்திக்(33), முத்துராஜ்(34) ஆகியோர் நேற்று கைசெய்யப்பட்டனர்.


