டீக்கடைக்குள் புகுந்த லாரி- 3 பேர் பலி
தாராபுரம் அருகே திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர் சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவையோடு ஏற்றி வந்த லாரி ரத்தினகுமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி
தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதிக்கு வந்தபோது சாலையோரம் இருந்த கலாமணியின் டீக்கடைக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது.
இதில் கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி(62) மற்றும் குப்பன் (70) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் ரத்தினகுமார் (28) தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் டீக்கடையில் அமர்ந்திருந்த தாராபுரத்தை அடுத்த நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் (20) சூரியநல்லூரை அடுத்த குப்பண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (67) செல்லமணி (64) முத்துச்சாமி (60) சூரியநல்லூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (46) காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஐந்து நபர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அழைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான குண்டடம் போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.