Homeசெய்திகள்தமிழ்நாடுதண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி - பயணிகள் அவதி

தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி – பயணிகள் அவதி

-

தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி – பயணிகள் அவதி
நாகர்கோவில் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் பள்ளியாடி அருகே மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்ததால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

தண்டவாளத்தில்

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு வேலைக்கு செல்பவர்கள், தனியார் கம்பெனிகளுக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்களின் வசதிக்காக நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் ரயில்கள் காலை வேளையில் அதிக அளவு இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது.

நேற்று காலையும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பள்ளியாடி அருகே உள்ள ரயில்வே பாலத்தில் இருந்து திடீரென ஒரு கம்பி தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் ரயில் தண்டவாளத்துக்கு மேல் செல்லும் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மின்கம்பி

இதனால் காலை 8 மணி முதல் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இங்கிருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

சென்னையில் இருந்து கொல்லம் வரை செல்லக்கூடிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரயில் காலை 8.40 மணி முதல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் நெல்லை மாவட்டத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு குமரி மாவட்டம் வழியாக ஜாம்நகர் செல்லக்கூடிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் வள்ளியூரில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தண்டவாளத்தில்

கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் புனே எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பயணிகள் ரயில் மற்றும் இங்கிருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆகியவையும் தாமதமாக இயக்கப்பட்டன.

இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். தண்டவாளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த போது அங்கு எந்த பணியாளர்களும் வேலை செய்யவில்லை. இதனால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. மேலும் ரயில்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்துகளும் தவிர்க்கப்பட்டன.

மின் கம்பி அறுந்து விழுந்த இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர். காலையில் 8 மணி அளவில் விழுந்த மின்வயர் மதியம் 11 மணி அளவில் சரிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வழிகளில் நிறுத்திவைக்கப்பட்ட ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன. சுமார் 4 மணி நேரம் நடுவழியில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால், பயணிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

MUST READ