தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்களாக இல்லாமல், வெறும் குழாயடிச் சண்டைகளாகவும், மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரித்துப் பேசும் மேடைகளாகவும் மாறிவருவதாக பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விண்ணை முட்டும் விலைவாசியும் அரசின் மௌனமும்
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்கள்படும் சொல்லொணா துன்பங்களான விலைவாசி உயர்வு குறித்துக் கேள்விகளை எழுப்பும்போது, அரசு தரப்பில் அதற்கான சரியான விளக்கமோ அல்லது விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான அதிரடித் திட்டங்களோ முன்வைக்கப்படவில்லை.

வெங்காயம், சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகின்றன. அதுமட்டுமின்றி, குடிநீரைக் கூட மக்கள் அன்றாடம் காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பதுக்கல்களைத் தடுக்கும் சட்டம் (Hoardings Act) மற்றும் அத்தியாவசிய பொருட்களை வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு போதிய முன்னெடுப்புகளை எடுக்கத் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் மலிந்து வரும் மதவாத அரசியலும் சிறுபான்மையின பிம்பமும்
கடந்த கால திராவிட ஆட்சிகளில் மதச்சார்பற்ற தன்மை உறுதியாகப் பேணப்பட்ட நிலையில், தற்போது சட்டமன்றத்திற்குள்ளேயே சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத ரீதியான விவாதங்களை வெளிப்படையாக முன்னெடுப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தமிழக மக்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்யை ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்காமல், தமிழர்களின் தலைவராகவே பார்க்கிறார்கள். ஆனால், சில சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களின் தனிப்பட்ட மத நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் பொதுவெளியிலும் சட்டமன்றத்திலும் தேவையின்றி விளம்பரப்படுத்தி அல்ப அரசியல் செய்து வருகின்றனர். பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் வழியில் உருவான “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உயரிய கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.
அத்துடன், திராவிடக் கட்சிகள் சிறுபான்மையினருக்கு எதுவும் செய்யவில்லை என்றும், புதிய ஆட்சி வந்தபிறகே அனைத்து நன்மைகளும் நடப்பதாகவும் பேசுவது அப்பட்டமான பொய். ஹஜ் பயணம், நோன்புக் கஞ்சி அரிசி மானியம், ஜெருசலேம் புனிதப் பயணம் என அனைத்துப் பலனுள்ள நலத்திட்டங்களும் கடந்த கால ஆட்சிகளிலேயே கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டவை என்பதை யாரும் மறுக்க முடியாது.
கொள்கைக் குறிப்பில் தலைவர்கள் பெயர்கள் புறக்கணிப்பும் போலி மேக்கப்பும்
பிற்படுத்தப்பட்டோர் நல மானியக் கோரிக்கைக் கொள்கைக் குறிப்பில் தந்தை பெரியார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது குறித்துப் பேசிய அவர், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் பெயர்களைப் பூசிக் கொண்ட போலி முகமூடி (மேக்கப்) தற்போது மெல்ல மெல்ல விலகி வருகிறது என்றார்.
அம்பேத்கர் பெயரிலான லண்டன் கல்வி உதவித்தொகைப் பிரச்சனை, பெருந்தலைவர் காமராஜர் பெயரைக் கூறிவிட்டுச் செய்யப்படும் ஆடம்பரச் செலவுகள், தூய்மைப் பணியாளர்களின் நியாயமான போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் சிறைச்சாலைகளைச் சுற்றிப் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் இவர்களின் கொள்கை முகமூடியைக் கிழித்துக் காட்டியுள்ளன.
மக்களின் உண்மையான அன்றாடப் பிரச்சனைகள் குறித்துச் சட்டமன்றத்திலும் வெளியிலும் பேசாமல், தலைவர்களின் பெயர்களைத் தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது வெறும் அரசியல் கிமிக்ஸ் (Gimmicks) மட்டுமே ஆகும். தவெக தலைவர் விஜய்யின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இதுபோன்ற நாடகங்களைச் செய்து நேரத்தை விரயம் செய்கிறார்கள் என்று பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
