‘நான் கடவுள்’ பட பாணியில் சடலத்தின் மீது அகோரி பூஜை- மயானத்தில் திகில்!
கோவை மாவட்டம் சூலூரில் எரிவாயு மயானத்தில் அகோரிகளால் எரியூட்டப்பட்ட உடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுமார் 40 வயது உடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை சூலூரில் உள்ள எரிவாயு மயானத்தில் தகனம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பெயரில் இரவு 7 மணி அளவில் சடலம் சூலூர் எரிவாயு மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. சடலத்துடன் இறந்தவரின் உறவினர்களுடன் 8 அகோரிகள் எனப்படும் சாமியார்கள் உடன் வந்து உள்ளனர். அவர்கள் சடலத்தை வேனில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லும் போது பிரம்மாண்டமான உடுக்கை வாத்தியங்களுடன் மந்திரங்கள் ஓதியபடி பின்னால் சென்றனர்.

மேலும் இறந்தவரின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்னதாக, வந்து இருந்த அகோரிகளில் ஒருவர் இறந்தவரின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து சுமார் ஐந்து நிமிடம் மந்திரங்களை ஓதினார். பின்னர் அகோரியின் உடம்பில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து இறந்தவரின் வாயில் வைத்து மந்திரம் ஓதினார். அதன் பின்னர் இறந்தவரின் உடல் எரிவாயு மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ சூலூர் பகுதியில் வைரலாகி வருகின்றது.