அதிமுக எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது- ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். இவரது வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரவீந்திரநாத், வங்கிகளில் பெற்ற ரூ.10 கோடி கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும், வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்துவிட்டதாகவும் மனுவில் மிலானி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டது குறித்தும் ஆதாரத்துடன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்ய ஏதுவாக உத்தரவு 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மக்களவையில் ஒரு எம்.பி கூட இல்லாத கட்சியானது அதிமுக.