ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்றக் காவல் வரும் 14ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5ஆம் தேதி மர்மகும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வடசென்னை ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேங்கடம் என்பவர் போலிசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரும் நீதிமன்ற காவல் முடிந்து, இன்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்கள் வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை பெற மறுத்துவிட்டனர். இதனை அடுத்து, வழக்கில் 27 பேரின் நீதிமன்றக் காவலை வருகின்ற 14-ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டனர்.