அரிசி நிரப்பப்பட்ட குக்கரால் காதலியை அடித்து கொன்ற காதலன் கைது..
பெங்களூருவில் உள்ள மைக்கோ லேஅவுட்டில் தனது காதலியை அரிசி நிரப்பிய குக்கரில் வைத்து கொலை செய்த வைஷ்ணவ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவ் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த தேவி ஆகியோர் பெங்களூருவில் உள்ள மைக்கோ லே அவுட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் உறவில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டிலும் இவர்களின் உறவு தெரிந்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருந்த நிலையில், தேவி வேறு ஒரு ஆண் நபருடன் பேசி வருவதாக சந்தேகித்த வைஷ்ணவ் நேற்று முன்தினம் இரவு தனது காதலியிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது இருவருக்கு இடையே சண்டை முற்றிய நிலையில் தனது காதலியை வீட்டில் இருந்த குக்கர் மூடியால் சரமாரியாக தாக்கி அடித்து கொலை செய்துள்ளார்.
பின்பு காவல்துறை கைதுக்கு பயந்து தனக்குத் தேவையான சில உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் தேவிக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்து அவர்கள் பெற்றோருக்கு மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்து வீட்டு உரிமையாளரின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து வீட்டு உரிமையாளர்கள் அங்கு சென்று பார்த்த போது வீடு திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே சென்றபோது அங்கு ரத்த வெள்ளத்தில் தேவி பிணமாக கடந்தார். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த பேகூர் போலீசார் தடயங்களை சேகரித்த பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் சம்பவ இடத்தில் கிடந்த ஆதாரங்களை வைத்து கொலை செய்தது வைஷ்ணவ் தான் என உறுதி செய்தனர். பின்னர் அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். வைஷ்ணவிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் திருமணம் செய்து கொள்ள தயாராகி வந்த நிலையில் தேவி வேறு ஒரு ஆண் நண்பருடன் கள்ள உறவு கொண்டு பேசி வந்ததாகவும் அது குறித்து கேட்ட போது தன்னை உதாசீனப்படுத்தியதாகவும் கோபத்தில் கொலை செய்ததும் ஒப்புக்கொண்டார். இது தொடர்ந்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.