Homeசெய்திகள்தமிழ்நாடுமூளை ரத்தநாள அடைப்பு - அதிகரிக்கும் பாதிப்புகள்

மூளை ரத்தநாள அடைப்பு – அதிகரிக்கும் பாதிப்புகள்

-

மூளை ரத்தநாள அடைப்பு – அதிகரிக்கும் பாதிப்புகள்

முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினர் கூட மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து காணலாம்.

முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு, brain stroke எனப்படும் மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் நடுத்தர வயதுடையவர்கள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடக்கும் போது சமநிலை தவறி விழுதல், ஒரு பக்கம் அல்லது முழுமையாக பார்வை இழப்பது, முகம் அல்லது வாய் கோணுதல், கை கால் உணர்வின்மை, பேசுவதில் தடுமாற்றம் போன்றவை தான் மூளை ரத்த நாள அடைப்புக்கு பிரதான அறிகுறிகள் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக இந்த அறிகுறிகள் தென்பட்டு முதல் 4 மணிநேரத்திற்குள் சிகிச்சை பெறுவதே இதில் குணமாவதற்கான வழி என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளம் வயதினருக்கு ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு நவீன வாழ்வியல் முறை, மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் தவிர்ப்பது கூட முக்கிய காரணம் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஆனந்த்.

இதனிடையே மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட கட்டியை அறுவை சிகிச்சை இல்லாமல் நுண்துளை மூலமாக சிகிச்சை கொடுத்து அகற்றிய ஓமந்தூரார் மருத்துவக் குழுவிற்கு அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட பொது மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் என 78 மையங்களில் மூளை ரத்த நாளங்கள் அடைப்பு மற்றும் மூளை ரத்தக் கசிவுக்கு சிகிச்சை அளிக்க உயர்தர வசதிகள் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனை தரவுகளின்படி 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 19 ஆயிரத்து 400 பேருக்கு மூளை ரத்த நாள அடைப்பு மற்றும் மூளை ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அதிலும், மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட 14ஆயிரத்து 700 பேரில் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் வந்து சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தவர்கள் 370 பேர் மட்டுமே. எனவே உரிய நேரத்தில் சிகிச்சை எடுப்பதே இந்த நோயில் இருந்து குணமடைய ஒரே வழி என கூறுகின்றனர் மருத்துவர்கள்.

MUST READ