Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரங்கேறும் லஞ்ச வேட்டை: கூட்டணி கட்சியை அலறவிட்ட உயர் அதிகாரி விவகாரம்!

முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரங்கேறும் லஞ்ச வேட்டை: கூட்டணி கட்சியை அலறவிட்ட உயர் அதிகாரி விவகாரம்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான தற்போதைய ஆட்சியில், அரசுத் துறை ஒன்றில் நிலவி வரும் கடுமையான லஞ்சப் புகார்களும், உயர் அதிகாரியின் தன்னிச்சையான போக்கும் ஆளும் கூட்டணி வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள் நலத் திட்டங்கள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், குறிப்பிட்ட ஒரு உயர் அதிகாரியின் லஞ்ச வேட்டை ஆளுங்கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

உயர் அதிகாரி

we-r-hiring

“கவனிப்பு” இன்றி நகராத கோப்புகள்:

“அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லியே ஒரு உயர் அதிகாரி கோடி கோடியாகக் கல்லா கட்டுகிறார்; உரிய கவனிப்பு இல்லாமல் எந்தவொரு கோப்பும் நகர மாட்டேன் என்கிறது” என்ற பகிரங்கக் குற்றச்சாட்டு தலைமைச் செயலக வட்டாரங்களில் பலமாக எதிரொலித்து வருகிறது. துறை ரீதியான பணி மாறுதல்கள், ஒப்பந்த அனுமதிகள் மற்றும் கோப்பு ஒப்புதல்கள் என எதுவாக இருந்தாலும், கேட்கும் தொகையைக் கொடுத்தால் மட்டுமே கையெழுத்து விழும் என்ற நிலை அங்கு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரின் உத்தரவையே தூக்கி எறிந்த அதிகாரி!

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த விவகாரத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. தவெகவின் முக்கியக் கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவருக்கு நெருக்கமான அரசு ஊழியரின் பணி மாறுதல் தொடர்பாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர். விஷயத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்ட மாண்புமிகு அமைச்சரும், உடனடியாக அந்த மாறுதல் கோப்பிற்குப் பச்சைக்கொடி காட்டி, உரிய அதிகாரியிடம் ஒப்புதல் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

ஆனால், அமைச்சரின் உத்தரவு அந்த உயர் அதிகாரியின் மேசைக்கு வந்ததும் நிலைமை மாறியது. “அமைச்சர் சொன்னால் மட்டும் போதாது, நமக்கான கவனிப்பு எங்கே?” என்ற பாணியில் அந்த அதிகாரி கோப்பை முடக்கி வைத்தார். கூட்டணி தலைவர்கள் பலமுறை வலியுறுத்தியும், “எனக்கு வர வேண்டியது வராமல் எந்த உத்தரவும் வெளியாகாது” என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இறுதியில், வேறு வழியின்றி கூட்டணி தலைவர்கள் கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுத்த பிறகே அந்த மாறுதல் உத்தரவு வெளியாகியுள்ளது. அமைச்சரின் அதிகாரப்பூர்வ உத்தரவையே ஒரு அதிகாரி பணம் பெற்றுக்கொண்டு நிறைவேற்றும் இந்தச் செயல் கூட்டணி தலைவர்கள்ளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சருக்குத் தெரியாமல் நடக்கும் கூத்து:

இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த லஞ்ச வேட்டையும் அதிகார துஷ்பிரயோகமும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்குச் செல்லாமலேயே அரங்கேறி வருவதுதான். நல்லாட்சியைத் தருவதாக உறுதியளித்து ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு சில உயர் அதிகாரிகள் தங்களின் சுயலாபத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வருக்குத் தெரியாமல் இந்த அத்துமீறல்கள் மறைக்கப்படுவதால், அந்த அதிகாரி மேலும் துணிச்சலாகச் செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர் மட்டக் குழுவிடம் பாய்ந்த புகார்:

தங்கள் கட்சிப் பரிந்துரைத்த கோப்பிற்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன என்று ஆத்திரமடைந்த கூட்டணி கட்சியின் முக்கியப் புள்ளிகள், இனி பொறுப்பதில் பயனில்லை என்று முடிவெடுத்துள்ளனர். அந்த அதிகாரியின் லஞ்சப் பட்டியல் மற்றும் அமைச்சரின் உத்தரவை அவர் அலட்சியப்படுத்திய ஆதாரங்களுடன், தவெகவின் தலைமை நிலைய உயர்மட்டக் குழுவிடம் அவர்கள் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.

முதலமைச்சரின் நேர்மையான நிர்வாகத்திற்கு இந்த மாதிரியான அதிகாரிகள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உடனடியாக இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கூட்டணி தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே விவசாயக் கடன் சுமையில் தமிழகம் முதலிடம்; ரூ.3.44 லட்சம் கோடி நிலுவை – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. தகவல்!

MUST READ