தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்று புதுச்சேரியில் இன்று முதல் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.