
நிலம் அல்லது வீட்டுமனை வாங்கும்போது பத்திரம் மற்றும் பட்டா இருந்தாலும், சட்டரீதியான சிக்கல்கள் காரணமாகப் பலர் பட்டா பெற முடியாமல் தவித்து வரும் சூழல் குறித்து விரிவாக பார்ப்போம். குறிப்பாக, நில உச்சவரம்புச் சட்டத்தின் (Land Ceiling Act) கீழ் பாதிக்கப்பட்ட ‘அனாதீனம்’ எனப்படும் நிலங்களை வாங்குவதால் ஏற்படும் சிக்கல்கள் அதிகம்.
நில உச்சவரம்புச் சட்டம் உருவான பின்னணி
சுதந்திரத்திற்குப் பிறகு ஜமீன்தார்கள் மற்றும் வசதி படைத்தவர்களிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்திருந்த நிலையில், ஏழை மக்களுக்கு நிலம் கிடைக்கவும், பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும் 1961-ல் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 1970 பிப்ரவரி 15-ல் நில உச்சவரம்பு குறைப்பின் கீழ் நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் (Urban Land Ceiling Act) கொண்டு வரப்பட்டு, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

’அனாதீனம்’ நிலங்களும் சிக்கல்களும்
நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் வரம்புக்கு மீறிய இடங்கள் அரசு வசம் எடுத்துக்கொள்ளப்பட்டு சர்வே எண்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 1999-ல் ஜூன் 16 இல் அச்சட்டம் ரத்து செய்யப்பட்டது.
அந்த காலக்கட்டத்தில் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட இடங்களை உரிமை கோராமல், சட்டரீதியான ஆவணங்கள் இல்லாத இவ்வகையான நிலங்கள் ‘அனாதீனம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய இடங்களை போலி ஆவணங்கள் மூலம் சிலர் விற்பனை செய்ததை வாங்கியவர்கள் பின்னர் பட்டா பெறுவதில் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
நிலம் வாங்குவோர் கவனிக்க வேண்டியவை
நிலம் அல்லது மனை வாங்குவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட இடத்தின் சர்வே எண்ணைக் கொண்டு நில உச்சவரம்பு அலுவலகத்தில் (Land Ceiling Office) விசாரித்து, அச்சட்டத்தின் கீழ் ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சட்ட ஆவணங்களை முறையாகப் பரிசீலித்து, உரிய கட்டணங்கள் மற்றும் நடைமுறைகளின்படி தடையில்லாச் சான்றிதழ் (NOC) போன்ற ஆவணங்களைப் பெறுவது அவசியம் .
