செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்தார்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்று, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை செய்து நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்து உள்ளனர். அமலாக்கத்துறை கைது செய்த போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.