தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகிறது. அந்த பள்ளிகளின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளுக்கு நிகரானதாக மாற்றவும் பள்ளிக் கல்வித்துறை முயற்சி செய்து வருகிறது. அரசின் இந்த முயற்சியினால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மேலும் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசின் நிதிஉதவியுடன் வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசும் ரூ.800 கோடி நிதி ஒதுக்கி அரசுப் பள்ளிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்ட அரசாணை பிறப்பித்துள்ளது.


ஆனாலும் அரசின் பங்களிப்பு மட்டும் வைத்து கொண்டு தனியார் பள்ளிகளோடு கல்வியில் போட்டி போட முடியாது. அதனால் முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும் இணைத்து செயல்பட தமிழக அரசு முடிவு செய்து ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் படித்து உயர்ந்த பதவிகளிலும், நல்ல நிலைகளில் உள்ளவர்களும், தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்கள், தொழிற்சாலைகளை நிறுவியவர்கள், சமூக அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றையும் இந்த திட்டத்தின் கீழ் இணைத்து அவர்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி என்னும் சிஎஸ்ஆர் நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்களிப்பு செய்ய கூடிய முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பள்ளி சுற்றுசுவர் அமைத்தல், பள்ளிக்கு பல வண்ணம் அடித்தல், சுகாதாரமான கழிப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் உருவாக்குதல், கணினிகள், நூலகங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை செய்வார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தையும் , அதற்கான இணைய தள சேவையையும் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு அசோக் லைலெண்ட் 19 கோடி, கனரா வங்கி 30 லட்சம், கெப்பிடல் லெண்ட் 3 கோடியே 78 லட்சம், ஹோண்டாய் நிறுவனம் 2 கோடி, ஐ.ஒ.சி.எல். 4கோடியே 33 லட்சம், எல் & டி 11 கோடி என்று பல நிறுவனங்கள் இது வரை 48 கோடியே 14 லட்ச ரூபாய் நிதியை கொடுத்துள்ளனர். முதலமைச்சரின் இந்த திட்டத்தினால் அரசு பள்ளிகளில் பயிலும் சாதாண ஏழை குழந்தைகளின் கல்வி தரம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒவ்வொரு ஊரிலும் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு தங்கள் படித்த பள்ளிக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்து வந்தது. அதனை எப்படி செய்ய வேண்டும், யார் வழியாக செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பி இருந்தனர். முதலமைச்சரின் இந்த திட்டம் அப்படிபட்ட முன்னாள் மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.


