
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னை சந்திக்க வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,500 புத்தகங்களை இன்று (அக்.28) தலைமைச் செயலகத்தில் சிறைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2018- ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்த்து, அறிவியக்கம் உருவாக்க புத்தகங்களை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதனையொட்டி, இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட சுமார் இரண்டு லட்சம் புத்தகங்களை தமிழ்நாடு மற்றும் அயலகத்தில் வாழும் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் நூலகங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் மன் அழுத்தத்தை போக்குவதற்காகவும், அவர்களின் மனதில் நற்சிந்தனைகளை விதைக்கும் விதமாக, மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள பார்ஸ்டல் பள்ளி ஆகியவற்றில் சிறை நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலகங்களில், பலவகையான புத்தகங்கள், பல்வேறு வகையான செய்தித்தாள்கள், வார/மாத இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் முதன்முறையாக சிறைத்துறை பங்கேற்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக பெற்றுள்ளது. மேலும், அனைத்து சிறைகளிலும் உள்ள சிறை நூலகங்களை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு 2023-2024 ஆம் ஆண்டில் 2 கோடியே 8 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மேற்படி சிறை நூலகங்களில், புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும், சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கு இப்புத்தகங்கள் பேருதவியாக அமையும் என்பதை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முதலமைச்சர் தனக்கு வழங்கப்பட்ட 1,500 புத்தகங்களை சிறை நூலகங்களுக்கு இன்று நன்கொடையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.