பாஜக பிரமுகர் மீது சொத்து அபகரிப்பு புகார்
திருப்பூரில், 31 லட்சம் ரூபாய் கடனுக்காக, 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக பாஜக பிரமுகர் மீது அவரது நண்பரே புகார் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், 31 லட்சம் ரூபாய் கடனுக்காக, நம்பிக்கை மோசடி செய்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து கொண்டதாக, பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் மீது அவரது நண்பரே போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரத்தை அடுத்த கொழிஞ்சிவாடி உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த சிவபாலமுருகன் என்பவர், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா மீது தாராபுரம் காவல்நிலையத்தில் இந்த புகாரை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரனோ பொதுமுடக்கத்தின் போது, தொழில் பாதிப்பால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக, 31 லட்சம் ரூபாயை தனது நண்பரான பாஜக பிரமுகர் ராஜாவிடம் கடனாக பெற்றுள்ளார்.
இதற்காக தனது 4 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை ராஜாவின் பெயரில் கிரையம் செய்து வைத்ததாகவும், கடனாக பெற்ற பணத்தை திரும்ப கொடுத்ததும் சொத்தை மீண்டும் தருவதாக ராஜா உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி, வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை செலுத்த தயாரான போது,
ராஜா, சொத்துக்களை தர மறுப்பதாகவும், நம்பிக்கை மோசடி செய்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்து கொண்டதுடன், தனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் சிவபாலமுருகன் கூறி உள்ளார்.
தனது குடும்ப சூழலை பயன்படுத்தி தன்னை ஏமாற்றி சொத்தை அபகரித்து கொண்ட பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தருவதுடன், தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கவும் அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.