கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ராகுல் (20), குமார் (28), விஜயகுமார் (25) ஆகியோர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள போத்தாபுரம் என்ற இடத்தில் கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே தருமபுரி நோக்கி சென்ற பார்சல் கண்டெய்னர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ராகுல், குமார், விஜய குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பட்டிணம் போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஓட்டுநர் மார்த்தாண்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.